​​ TVS குழும தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TVS குழும தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை

TVS குழும தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை

Aug 10, 2018 11:19 AM

மயிலாப்பூர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான மயில் சிலை களவாடப்பட்ட வழக்கில், திருப்பணிக் குழு உறுப்பினராக இருந்த டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான மயில் சிலை ஒன்று களவாடப்பட்டதாக புகார் எழுந்தது. 

இங்கு பார்வதி மயில் ரூபத்தில் வந்து சிவனை மலர் தூவி பூஜித்தார் என்பதை நினைவூட்டும் வகையில், வாயில் குவளை மலரை கவ்வியபடி சிவலிங்கத்துக்கு மயில் ஒன்று பூஜை செய்வது போல, 1000 ஆண்டுகள் பழமையான கல்லாலான மயில் சிலை மூலவர் அருகே அமைக்கப்பட்டிருந்தது. 

2004 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிசேகத்திற்கு பின்னர், அந்த பழமையான மயில் சிலையை அகற்றிவிட்டு புதிதாக ஒரு மயில் சிலை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட மயில் சிலையின் வாயில் மலருக்கு பதில் பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போல இருந்ததால் மயில் சிலை களவாடப்பட்டதை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். தொன்மையான மயில் சிலை மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை புகார் ஏதும் அளிக்காமல் மறைத்து வந்து நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் சிலை திருடி கடத்தப்பட்டதாகவும் அங்கு நடந்த கோவில் புனரமைப்பு பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து புகார் அளித்தால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் ரங்கராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் குறித்து விசாரித்து 6 வார காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது. 

ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் தனது விசாரணையை இன்று தொடங்க இருக்கிறார். இந்நிலையில், டிவி சுந்தரம் அய்யங்காரின் பேரனும், டிவிஎஸ் குழுமங்களின் தலைவரும், மயிலாப்பூர் கோவில் திருப்பணிக் குழு உறுப்பினராகவும், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்தவருமான வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம், கர்நாடகா கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிசேகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த பணத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திருப்பணி குழுவில் மற்றொரு உறுப்பினராக அப்பலோ குழும தலைவர்  இருந்ததாகவும், அவர் மேற்பார்வையிலேயே திருப்பணிகள் நடைபெற்றதாகவும் மனுவில் வேணு சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் என்ற முறையிலும், 2015 ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிக்குழு தலைவர் என்ற முறையிலும், 25 கோடி ரூபாய்க்கு சொந்தபணத்தில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி, புனரமைப்பு தொடர்பான வழக்கில்  தன்னை காவல் துறையினர் சேர்த்துள்ளதாக யானை ராஜேந்திரன் வழக்கில் தெரிவித்துள்ளதாலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்யக் கூடும் என்பதாலும் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இதையடுத்தே, வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், வேணு சீனிவாசனை ஆறு வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் போலீசார் உத்தரவாதம் அளித்தனர்.

இதை ஏற்று வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் முன்ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 6 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.