​​ காவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை

Aug 10, 2018 9:36 AM

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இந்த இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால், கர்நாடகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

image

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்றிரவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வந்த நிலையில், தற்போது நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இன்று மாலைக்குள் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவியிலும் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 116.85 அடியாகவும், நீர்இருப்பு 88.53 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 29 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு  28,300 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர் ஓரிரு நாளில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.