​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

Published : Aug 09, 2018 8:48 PM

தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

Aug 09, 2018 8:48 PM

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடரும் மழையால் பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் பாவனி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 466 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணைக்கு ஆயிரத்து 137 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. 77 அடியை உச்சகட்ட கொள்ளளவாக கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி,  ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பாய்கிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் வைகை அணைக்கும், தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளாவில் பெய்யும் கனமழையால் பெரியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல், முல்லை பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையில் நீர் இருப்பு 5539 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில் நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரம் கனஅடி வீதமாகவும், வெளியேற்றம் இரண்டாயிரம் கனஅடி வீதமாவும் உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 1600 கனஅடி வீதமாகவும், வெளியேற்றம் 960 கனஅடி வீதமாகவும் உள்ளது.

தேனி மாவட்டம் போடி அதன் சுற்றுப்பகுதிகளான ராசிங்காபுரம் சிலமலை மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஊர்களிலும், குரங்கணி, கொட்டகுடி  உள்ளிட்ட மலை கிராமங்களிலும் மழை  வெளுத்து வாங்குகிறது.  மழை காரணமாக போடி கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கொட்டகுடி ஆற்றின் குறுக்கே உள்ள அணைப்பிள்ளையார் தடுப்பணையில்,  அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது. 

கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை மழை காரணமாக நிரம்பி உள்ளது. 100 அடியை உச்சகட்ட நீர்தேக்கும் கொள்ளளவாக கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளதால், வினாடிக்கு
பத்தாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில்  கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பல ஊர்களில் கனமழை பெய்துவருகிறது. உதகை மற்றும் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக   கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி,மலப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கனமழையால் காரணமாக  மரங்கள் விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.  நிலம்பூர் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழை நீர் கரை புரண்டு ஓடுவதால் அவ்வழியாக  லாரிகளில் சரக்குகள் ஏற்றிவந்த ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்டனர்.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அடைமழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ளத்தால், இடுக்கி மாவட்டத்தில் 11 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், வயநாட்டில் ஒருவரும் என கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

மழை தொடர்வதால் வெள்ள நிவாரண பணிகளுக்காக ராணுவம், கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை கேரள மாநில அரசு கோரி உள்ளது.

தென்மேற்கு பருவமழை அடைமழையாக வெளுத்து வாங்குவதால், கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22 அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பின. இதனால் அந்த அணைகள் அனைத்திலும் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள மிக உயரமான அணையான இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 26 ஆண்டுகளுக்கு பின்  அணை திறக்கப்பட்டுள்ளது. சிறுதோணி மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழையால், சோலையார் அணை 4வது முறையாக திறக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் மாதமே சோலையார் அணை நிரம்பியது. தற்போது மீண்டும் கனமழை கொட்டி வரும் நிலையில், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, சோலையார் அணையின் 3 மதகுகளும் திறக்கப்பட்டது. கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர்மழையால், தமிழக - கேரள எல்லை அருகே பிரதான சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டது.  இதனால் அவ்வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாளையம் என்ற இடத்தில் சாலையை ஒட்டி வியாழனன்று மண்சரிவு ஏற்பட்டது.