​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலை., மறு மதிப்பீடு முறைகேடு மட்டுமின்றி, தேர்வு எழுதிய மாணவர்களிடம் பணம் வாங்கி தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார்

Published : Aug 05, 2018 12:31 AM

அண்ணா பல்கலை., மறு மதிப்பீடு முறைகேடு மட்டுமின்றி, தேர்வு எழுதிய மாணவர்களிடம் பணம் வாங்கி தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார்

Aug 05, 2018 12:31 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீடு முறைகேடு மட்டுமின்றி, தேர்வு எழுதிய மாணவர்களிடம்  பணம் வாங்கி கொண்டு தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.  லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்த தில் 240 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய உமா உள்ளிட்ட மூன்று பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட பத்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே மறு மதிப்பீட்டில் மட்டுமின்றி, நேரடியாக தேர்வு தாள் திருத்துவதிலும் கூட முறைகேடு நடைபெற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையவதற்கு பணம் கொடுக்கத் தயாராக உள்ள மாணவர்களை தரகர்கள் மூலம் கண்டறிந்து தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் மதிப்பெண்ணுக்கு ஏற்றார்போல் பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடைத்தாளில் ஒரு மாணவர் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள பெயர் உள்ளிட்ட எதையும் குறிப்பிடக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், பணம் கொடுத்த மாணவர்கள் யார்? என அடையாளம் காண கோட் வேர்டு போன்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

பணம் கொடுக்க முன்வரும் மாணவர்களிடம் தரகர்கள் அல்லது முறைகேட்டில் ஈடுபடும் பேராசியர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்து விடுவார்கள். தேர்வு எழுதி முடித்த பின்னர், விடைத்தாள் பக்கங்களின் கூட்டுத் தொகையை முதல் பக்கத்தில் மாணவர்கள் எழுத வேண்டும். அப்போது, உண்மையான கூட்டுத் தொகையை எழுதாமல் 11 என்ற எண்ணை எழுத சொல்வதை முறைகேட்டுக் கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது.

தேர்வுகள் முடித்த பின்னர் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறும் போது, தரகர்கள் , பணம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாள்களை அடையாளம் கண்டு தனியே எடுத்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் பணம் கொடுத்த மாணவரை அழைத்து அவருக்கு வினாக்களுக்கு உரிய விடையும் கொடுத்து, காலி விடைத்தாள்களையும் கொடுத்து எழுதச் சொல்வார்கள்.

மாணவர் எழுதி முடித்த பின்னர், ஏற்கனவே உள்ள விடைத்தாளின் முதல் பக்கத்தில், உள்ள 11 என்ற எண்ணை தற்போது உள்ள விடைத்தாள்களின் கூட்டுத்தொகைக்கு ஏற்ப திருத்திக் கொள்வார்கள். உதாரணத்துக்கு 11 என்ற பக்கங்களின் எண்ணிக்கையை 44 ஆகக் கூடத் திருத்திக் கொள்ள முடியும். இந்த முறையிலும் பல நூறு கோடி ரூபாய் கைமாறி உள்ளதும், மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்று உள்ளதும் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் உமாவுடன் இணைந்து செயல்பட்ட பலரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே மறு மதிப்பீட்டு முறைகேட்டில் பல்கலை கழக விதிகளை பயன்படுத்தி உமாவின் கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்துள்ளனர். பல்கலை கழக விதியின் படி முதல் முறைக்கும், மறுமதிப்பீட்டும் 15 மதிப்பெண்கள் வித்தியாசம் இருக்குமெனில் ஒரு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்குத் தகுதியானது ஆகும். இரண்டாம் முறை மறு மதிப்பீட்டு வாய்ப்பும் கொடுக்கப்பட்டு, இரண்டில் எந்த மதிப்பெண் அதிகமோ அதுவே உண்மையான மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த விதிகளில் உள்ள சில குறைகளைப் பயன்படுத்தியும் அண்ணா பல்கலைக் கழகத் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணத்துக்கு பிரைமரி வேல்யூசன் எனப்படும் முதன் முறை திருத்தத்தில் 5 மதிப்பெண் பெறும் ஒரு மாணவர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கிறார். மறு மதிப்பீட்டில் அவருக்கு 45 மதிப்பெண்கள் கிடைத்தாலும் அவர், மீண்டும் ஒரு முறை மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புண்டு.

இரண்டாம் முறை மறு மதிப்பீட்டின் போது அவருக்கு 77 மதிப்பெண்கள் கிடைக்கும் என்றால், அதிகபட்ச மதிப்பெண்ணான 77 என்ற மதிப்பெண்ணே அவருடைய உண்மையான மதிப்பெண்ணாக விதிப்படி கருதப்படுகிறது. 5 மதிப்பெண்கள் பெற்றவரையும் 77 மதிப்பெண்கள் பெற்றதாக மாற்றக் கூடிய சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.