​​ வண்ணமயமான சித்திரங்களால் நிறைந்துள்ள அரசு பள்ளி..! ஓவியங்கள் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வண்ணமயமான சித்திரங்களால் நிறைந்துள்ள அரசு பள்ளி..! ஓவியங்கள் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்


வண்ணமயமான சித்திரங்களால் நிறைந்துள்ள அரசு பள்ளி..! ஓவியங்கள் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

Aug 03, 2018 2:34 AM

திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளி ஒன்று வகுப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்களைத் தீட்டி, அவற்றின் மூலம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி அசத்தி வருகிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோரின் அபிமானத்துக்கும் உரியதாக மாறிய அரசுப் பள்ளி குறித்து இப்போது காணலாம்.

image

எழுத்துக்களைச் சுமக்கும் பாம்புகள் ! எண்களை ஏற்றி தடதடக்கும் ரயில்பெட்டிகள் ! தேசிய சின்னங்களால் நிரம்பும் சுவர்கள் ! திருப்பூர் கவிதாலட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காணக் கிடைக்கும் வண்ணமயமான காட்சிகள்தான் இவை.

4 சென்ட் பரப்பில் ஒரே கட்டிடத்தில் 5-ஆம் வகுப்பு வரை இயங்கியதோடு, போதிய வசதிகள் இல்லாததால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டது இந்தப் பள்ளி. 22 மாணவிகளே இருந்த நிலையில், 2008 -ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கற்பகம், இந்த நிலையை மாற்ற முனைந்தார்.

இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதி, திருப்பூரில் உள்ள பல்வேறு தொழிலதிபர்களை நாடி 8 லட்சம் ரூபாய் நிதி சேகரித்து, கூடுதலாக 4 சென்ட் நிலம் வாங்கி பள்ளியை விரிவுபடுத்தியுள்ளார்.

பின்னர் வீடுவீடாக சென்று பெற்றோரை சந்தித்து மாணவர் சேர்க்கைக்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் தலைமை ஆசிரியர் கற்பகம். இதன் பலனாக மாணவ, மாணவியர் எண்ணிக்கையும் உயர்ந்தது.

கற்பித்தலில் மாற்றம் கொண்டுவருவதற்காக, சொந்த தொகை 50 ஆயிரத்தோடு, ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி, பள்ளியையே சித்திரங்களால் நிரப்பியுள்ளார் தலைமை ஆசிரியர் கற்பகம்.

image

பள்ளியின் நுழைவாயில், தாழ்வாரம், அனைத்து வகுப்பறைகளின் சுவர்கள், மதிய சத்துணவுக்காக சமையல் செய்யும் அறை, பிள்ளைகள் கை கழுவும் இடம் என, அனைத்து பகுதியிலும் வண்ண மயமான ஓவியங்கள் இடம்பெறச் செய்துள்ளார். 

அனைத்து வகையான விலங்குகள், பறவைகள், தேசிய நினைவுச்சின்னங்கள், தேசியம் குறித்த அம்சங்கள், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் என அனைத்தும் பள்ளிச்சுவர்களில் ஓவியங்களாக உறைந்துள்ளன.

தமிழ் - ஆங்கில எழுத்துக்கள், எண்கள், அறிவியல், வரலாறு தொடர்பான சித்திரங்கள் மூலம் பாடம் குழந்தைகளின் உலகத்துக்கே சென்று பாடம் நடத்தவே இந்த முறையை கையாளுவதாக தலைமை ஆசிரியர் கற்பகம் கூறுகிறார்.

வகுப்பறைகளில் மேற்கூரைகள் வானம் போலவும் சுவர்களில் பறவைகள் பறப்பது போலவும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. சாலைவிதிகளை விளக்கும் படங்கள், பிள்ளைகள் கை கழுவும் இடத்தில், கைகழுவும் முறை குறித்த படங்கள், குழந்தைகளைக் கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றவைவும் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. பாடங்களோடு, சுற்றுச்சூழலையும், சமூகத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க ஓவியங்கள் உதவியாக இருப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கவிதா லட்சுமி நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இந்த ஆண்டு, 160 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். புத்தகம், நோட்டுகள், கரும்பலகைகளை மட்டும் வைத்துக் கொண்டு பாடம் நடத்தி முடிக்காமல், கற்பித்தலின் மீதான தீராத ஆர்வத்திலும், மாணவ, மாணவிகள் மீதான அக்கறையாலும் அரசுப் பள்ளி வண்ணமயமாக மாறியுள்ளது.