​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு அதிகாரி கொலை... டைப்பிஸ்ட கைது..! முடிவுக்கு வராத குழப்பம்

Published : Aug 03, 2018 1:45 AM



அரசு அதிகாரி கொலை... டைப்பிஸ்ட கைது..! முடிவுக்கு வராத குழப்பம்

Aug 03, 2018 1:45 AM

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் நீண்ட இழுபறிக்கு பின்னர் கலெக்டர் அலுவலக டைப்பிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் பூபதி கண்ணன், திருச்சியில் வசித்து வந்த பூபதி கண்ணன் தினமும் காரில் பணிக்கு சென்று வருவது வழக்கம் . இந்த நிலையில் கடந்த 27 ந்தேதி பணிக்கு சென்றவர் வீடுதிரும்பவில்லை. மறு நாள் காலை திருச்சி மாத்தூர் அரைவட்ட சாலையை யொட்டிய ஒதுக்குபுறமான பகுதியில் காரின் அருகில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தார்.

காரில் கிடந்த பெண்ணின் ஆடை ஒன்றை தடயமாக கொண்டு விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் சம்பவத்தன்று பூபதிகண்ணனுடன் காரில் சென்ற புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக டைப்பிஸ்ட் சவுந்தர்யாவை பிடித்து விசாரித்தனர். முதலில் மறுத்த அவர் காவல்துறையினர் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.

அவர்கள் இருவரும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் ஒன்றாக செல்லும் காட்சி ஆட்சியர் அலுவலக சிசிடிவி காட்சியிலும், திருச்சிக்கு செல்லும் சாலையில் உள்ள சுங்கச்சாவடி கேமராவிலும் பதிவாகி இருந்தது.

தினமும் சுங்க கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்படும் வாகனம் என்பதால் பூபதிகண்ணனின் காரை அங்குள்ள ஊழியர்கள் நன்கு நினைவில் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து சவுந்தர்யா பூபதி கண்ணனுடன் சென்றதை ஒப்புக் கொண்டார். இருவருக்கும் உள்ள தவறான தொடர்பை ஒப்புக்கொண்ட அவர், இருவரும் தனிமையில் இருந்த போது அங்கு வந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் பூபதிகண்ணனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றதாகவும், தான் அவசர அவசரமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் கூறினார். இதனால் கொலையாளி யார் என்பதை கண்டறிய இயலாமல் காவல்துறையினர் தவித்தனர்.

மேலும் பூபதி கண்ணனுக்கும், தனக்கும் உள்ள தொடர்பு அவரது மனைவிக்கு தெரியும் என்றும் அவரது மனைவி அனுராதா ஏவிய கூலிப்படை ஆசாமி தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினரை திசை திருப்பி உள்ளார் சவுந்தர்யா, போலீசார் அனுராதாவிடமும் விசாரணை நடத்தினர். அதிலும் துப்பு துலங்காமல் வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது.

இந்த நிலையில் சவுந்தர்யாவின் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பூபதி கண்ணன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முதலில் அவர் அன்பளிப்பாக கொடுத்தார் என்று காவல்துறையினரிடம் கூறிய சவுந்தர்யா, பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த பூபதி கண்ணன் கழுத்தில் இருந்து எடுத்து வந்ததாகவும் கூறி சிக்கிக் கொண்டார்.

பூபதி கண்ணன் கொலை செய்யப்படும் வரை அங்கிருந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர் சவுந்தர்யாவின் தொடர்பு இல்லாமல் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று முடிவுக்கு வந்தனர். தொடர்ச்சியான கிடுப்பிடி விசாரணையின் போது பூபதி கண்ணனை கொலை செய்ததை சவுந்தர்யா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்பதால் பூபதி கண்ணனுக்கு அலுவலகத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததாகவும், அதனால் கருணை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்த தான் அவரை காதல் வலையில் வீழ்த்தியதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்தி அவரிடம் அதிக அளவில் பணம் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

பூபதிகண்ணனை போலவே சவுந்தர்யா மேலும் சிலருடனும் தவறான தொடர்பு வைத்திருந்துள்ளார். அவர்களுடன் உள்ள தொடர்பை கைவிட சொல்லி பூபதி கண்ணன் அடிக்கடி மிரட்டி வந்ததால், சம்பவத்தன்று பூபதி கண்ணனை மதுக்குடிக்கவைத்து போதை ஏற்றிய சவுந்தர்யா திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகின்றது. கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மற்றொரு காதலனை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..!

இருவருக்கும் இடையேயான தவறான உடல் சார்ந்த தேடலில் உண்டான போட்டியில் இந்த கொடூர கொலை நிகழ்ந்துள்ளது என்கின்றனர் காவல்துறையினர்..!