​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சீர்செய்யப்பட்டது - காவேரி மருத்துவமனை அறிக்கை

Published : Jul 30, 2018 10:59 AM



கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சீர்செய்யப்பட்டது - காவேரி மருத்துவமனை அறிக்கை

Jul 30, 2018 10:59 AM

சென்னையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு இரவு 7 மணியளவில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து தி.மு.க தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். கருணாநிதியின் பேரன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்த வெளிநபர்களும் வெளியேற்றப்பட்டனர்.

 

இந்த நிலையில் இரவு 9.50 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டு இருந்ததாகவும், அது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்து. இதனிடையே தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிய காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது என்றும், ஆனால் தொடர் சிகிச்சையின் மூலம் கலைஞரின் உடல்நிலை தற்போது சீர்செய்யப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார்.

 

இதையடுத்து, கலைஞர் உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தி.மு.க தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் காவல்துறை அறிவுறுத்தியது. கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க வருகை தரும் மருத்துவ குழுவுக்கு வழிவிடுமாறு தொண்டர்களுக்கு மைக் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் கருணாநிதியின் உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.