​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பேட்டி

Published : Jul 27, 2018 11:21 AM



கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பேட்டி

Jul 27, 2018 11:21 AM

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடல் நலம் விசாரித்தனர். 

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வயது மூப்பின் காரணமாக, கருணாநிதியின் உடல் நலத்தில், நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக, கருணாநிதிக்கு காய்ச்சல் வந்திருப்பதாகவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்வதாகவும், வீட்டிலேயே மருத்துவமனையில் இருக்கும் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை பார்க்க, யாரும், நேரில் வர வேண்டாம் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 9.55 மணி அளவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதியின் உடல்நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அரசியல் நாகரிகம் கருதி நலன் விசாரிக்க வந்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு இரவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திரண்டனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கருணாநிதியின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். கருணாநிதி நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்தார்

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்

கருணாநிதியின் உடல் நலம் அறிய திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நள்ளிரவில் கருணாநிதியின் வீட்டின் முன்பு திரண்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்தது. கருணாநிதி வீட்டைச் சுற்றிலும் தடுப்புகளும் அமைக்கப்பட்டன.