​​ ஜோதிடருக்கு நேரம் சரியில்லை..! காதலில் விழுந்ததால் விபரீதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜோதிடருக்கு நேரம் சரியில்லை..! காதலில் விழுந்ததால் விபரீதம்


ஜோதிடருக்கு நேரம் சரியில்லை..! காதலில் விழுந்ததால் விபரீதம்

Jul 11, 2018 7:52 PM

சேலத்தில் காதலியின் கணவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் பிரபல ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய காதலில் விழுந்ததால் கொலையாளியான ஜோதிடரின் கெட்ட நேரம்.

ஜோதிடம் பார்க்க வந்தவரின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய ஜோதிடர் சுந்தரம் இவர்தான்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்தவர் பிரபல ஜோதிடர் சுந்தரம்..! குடும்ப பிரச்சனை, செய்வினை கோளாறு, பெயர் ராசி பார்த்தல், பில்லி சூனியத்திற்கு தீர்வு காணுதல் என தனக்கு தெரியாத வித்தையே இல்லை என்று விளம்பரப்படுத்தி ஜாதகம் பார்த்து வந்தார்.

குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இவரை நம்பி, பண்ணபட்டியை சேர்ந்த டீ மாஸ்டர் சுரேஷ் என்பவர் தனது மனைவி அலமேலுவுடன் வந்தார். குடும்ப பிரச்சனைக்கு முழு முதற்காரணம் சுரேசிடம் உள்ள குடிபழக்கம் தான் என்பதை அவர்களிடம் பேச்சுக்கொடுத்தே தெரிந்து கொண்ட ஜோதிடர் சுந்தரம், அவரிடம், உள்ள குடிபழக்கத்தை மறக்கடிக்க பூஜை செய்வதாக கதை அளந்து விட்டு அலமேலுவுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.

ஒரு கட்டத்தில் டீ மாஸ்டர் சுரேஷ் இல்லாத போது அவரது மனைவி அலமேலுவை சந்திப்பதை வாடிக்கையாக்கிய ஜோதிடர் சுந்தரம், ஆசைவார்த்தை கூறி அலமேலுவை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது ரகசிய காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து அலமேலுவை அடித்து உதைத்த கணவர் சுரேஷ் தொடர்ந்து ஜோதிடரை சந்திப்பதற்கும் தடை விதித்தார். தினமும் மது போதையில் வந்து அலமேலுவை அடித்து உதைத்து வருவதாகவும் எனவே அவரை தீர்த்துகட்டினால் தொல்லை நீங்கும் என்று ஜோதிடர் சுந்தரத்திடம், அலமேலு கதறி உள்ளார்.

அதுவரை தான் நினைத்ததையெல்லாம் சாதித்த ஜோதிடருக்கு, ரகசிய காதலி அலமேலுவின் கொலை திட்டத்துக்கு உடன்பட்டதால் கெட்ட நேரம் தொடங்கியது. கடந்த 6 ந்தேதி மதுவாங்கி தருவதாக கூறி தொளசம்பட்டி
ஊ.மாரமங்கலம் ஏரி பகுதிக்கு டீ மாஸ்டர் சுரேஷை கூட்டிச்சென்றுள்ளார் ஜோதிடர் சுந்தரம். அங்கு வைத்து தனது கூட்டாளிகளான லோக்கேஷ்குமார், கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார்.

ஓசியில் கிடைகிறது என்பதால் மூக்கு முட்ட குடித்த சுரேசை, சுந்தரம் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தலைமறைவான நிலையில் சுரேஷின் மனைவி அலமேலுவிடம் நடத்திய விசாரணையில் ஜோதிடர் சுந்தரம், மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எங்கே போலீசில் சிக்கினால் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஜோதிடர் சுந்தரம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்

கொலை சம்பவம் தொடர்பாக ஜோதிடரின் காதலி அலமேலு, ஜோதிடரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜோதிடர் சுந்தரம் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சுந்தரம் ஏற்கனவே சிறுமி ஒருவரிடம் சில்மிஷம் செய்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்கு ஜோதிடரை நம்பிச்சென்ற பெண்ணின் விபரீத திட்டத்தால் அவரது இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதே நேரத்தில் சபல புத்தியால் ஜோதிடர் கொலையாளி பட்டத்தோடு மருத்துவமனையில் உயிருக்கு போராடிவருவதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்..!