​​ 59 வயது பெண்ணுக்கு இரைப்பை உணவு மாற்று பாதை அறுவை சிகிச்சை, 20 நாளில் 16 கிலோ எடை குறைந்தது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
59 வயது பெண்ணுக்கு இரைப்பை உணவு மாற்று பாதை அறுவை சிகிச்சை, 20 நாளில் 16 கிலோ எடை குறைந்தது


59 வயது பெண்ணுக்கு இரைப்பை உணவு மாற்று பாதை அறுவை சிகிச்சை, 20 நாளில் 16 கிலோ எடை குறைந்தது

Jul 12, 2018 12:40 AM

சென்னையைச் சேர்ந்த 59 வயதான பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட இரைப்பை உணவு மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை மூலம், 20 நாளில் 16 கிலோ எடை குறைந்துள்ளது. 

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 59 வயதான சாவித்ரி என்ற பெண் 111 கிலோ எடையுடன், நீரிழிவு நோயாலும், குடல் இறக்க பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து, இரைப்பையை சிறிதாக்கும், இரைப்பை உணவு மாற்று பாதை அறுவை சிகிச்சை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்டது.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 59 வயதான சாவித்ரி, படிப்படியாக அனைத்து பாதிப்புகளிலிருந்தும் மீண்டு, புதன்கிழமையன்று வீடு திரும்பினார். இரைப்பை உணவு மாற்றுப் பாதை அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 20 நாட்களில் 16 கிலோ உடல் எடை குறைந்துள்ளது. மேலும், கட்டுபாடின்றி இருந்த நீரிழிவு நோய், 160 என்ற அளவில் கட்டுக்குள் வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், முதன்முறையாக, இரைப்பை உணவு மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உடல் பருமனையும், அதோடு இணைந்தே வரும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், நாள்தோறும், சீரான இடத்தில், குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், தடை எதுவும் இன்றி நல்ல தூக்கம் கிடைக்கும் என்பதால், மனஅழுத்தம் குறைந்து, உடல் பருமனும், நீரிழிவு நோயும் கட்டுக்குள் வந்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்...