​​ பருவமழையால் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பருவமழையால் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன..!

பருவமழையால் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன..!

Jul 11, 2018 11:24 PM

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் 70 அடியைத் தாண்டி  உயர்ந்து வருகிறது...பருவமழையால், மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளும் நிரம்பி உள்ளன. 

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநில அணைகளில் அனைத்தும் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. அதிலும் கபினி அணையில், அதன் உச்சகட்ட நீர்தேக்கும் அளவான 84 அடியில், தற்போது 83.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதே நேரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதற்கு மேல் தேக்கி வைக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியைத் தாண்டி உள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து, 70 அடியை கடந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.கபினி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரு நாட்களில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கன மழை காரணமாக கோவை மாவட்டம் சிறுவாணி அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ளது. அணையின் மொத்த உயரமான 50 அடியை நீர்மட்டம் தொட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது. சிறுவாணியில் இருந்து வெளியேறும் நீர் பவானி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்குச் செல்கிறது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குந்தா அணையும் நிரம்பி உள்ளது. அணையின் மொத்த நீர்தேக்கும் அளவான 89 அடியை நீர்மட்டம் தொட்டுள்ளது. இதை அடுத்து குந்தா அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும் பவானி ஆற்றின் மூலம் பில்லூர் அணைக்கே சென்று சேர்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. கடந்த மாதம் 10-ஆம் தேதி நிரம்பிய அந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை அன்று 97 அடியை தொட்டது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றங்கரையோர மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, லிங்காபுரம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 88 புள்ளி 1 அடியாக உள்ளது. ((அணைக்கு வினாடிக்கு 15,556 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்குக்கு இருநூறு கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.)) பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 3090 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. ((அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்குக்கு ஆயிரத்து 256 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.))

இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 57அடியை உச்சகட்ட நீர்தேக்கும் அளவாக கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது.