​​ துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று இருந்தார்? - உயர்நீதிமன்றம் கேள்வி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று இருந்தார்? - உயர்நீதிமன்றம் கேள்வி


துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று இருந்தார்? - உயர்நீதிமன்றம் கேள்வி

Jul 11, 2018 4:40 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றார் என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, என்னென்ன வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்றும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிக இழப்பீட்டு தொகை, மருத்துவ உதவி, இணையதளச் சேவை, பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலவச சட்ட உதவி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆஜரான மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், மே 20ஆம் தேதி மாவட்ட எஸ்.பி. தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவில்லை என்றும் வாதிட்டார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லை என்றும், போராட்டத்திற்கு பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தூத்துக்குடியில் சமாதானக் கூட்டம் நடந்தபோது, சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றதாகவும், எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம் என அப்போது பொதுமக்கள் உறுதி அளித்ததாகவும் வாதிட்டார். ஆனால், மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியதுடன், பொதுச்சொத்துகளையும் சேதப்படுத்தியதாக வாதிட்டார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தபோது மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச் சூடு நடத்த போலீசார் என்னென்ன வகை துப்பாக்கிகளை பயன்படுத்தினர் என்றும் கேட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாட்களாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ பதிவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும், 99 நாட்கள் அமைதிப் போராட்டம் நடந்தபோது, உளவுப்பிரிவு போலீசார் சேகரித்த தினசரி தகவல்களையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.