​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published : Jul 08, 2018 4:00 PM

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Jul 08, 2018 4:00 PM

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு திட்ட ஆய்வு, வரும் 12 ஆம் தேதி கோவை பீளமேட்டில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில் இருந்து உதவி கல்வி அலுவலர் வரை இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும், பள்ளிகல்வித்துறையின் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களிலும் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்காக 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படுவது குறித்து மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு இதுவரை கடிதம் வரவில்லை எனவும், அப்படி வந்தால் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வரும்15 ஆம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவதை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.