​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைத்து RTO அலுவலகங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Published : Jun 29, 2018 8:57 PM

அனைத்து RTO அலுவலகங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Jun 29, 2018 8:57 PM

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் 3 மாதங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான சோதனைகள் அனைத்தையும் எலெக்ட்ரானிக் முறையில் நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனைகளை மேனுவல் முறையில் மேற்கொள்வதால் பல பிரச்சனைகள், தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், முறையாக கற்றுத் தேறாதவர்களுக்கும் உரிமம் வழங்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தவறுகள், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முறையாக கற்றுத் தேறாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை என்றும், எலெக்ட்ரானிக் முறையை கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது என்பது பொதுமக்களின் நலன்கள் சார்ந்தது என குறிப்பிட்ட நீதிபதி, எலெக்ட்ரானிக் சோதனை முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என்றும், அவை எல்லா நேரங்களிலும் இயங்குவதாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

சிசிடிவி கேமிராக்கள் ஒரு வாரத்திற்கு மேல் இயங்காமல் இருந்தால் அதிகாரிகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அலட்சியமாக செயல்பட்டதாக துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி கூறினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இடைத் தரகர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அத்தகைய நபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆர்டிஓ அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துவிவரங்களை தமிழக அரசு பெற்று, அதில் தவறுகள், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு என ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தி, அந்த பிரிவினர் அடிக்கடி திடீர் ஆய்வுகள் நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். இந்த உத்தரவுகளை செயல்படுத்தி, 4 வார காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.