தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் நாள் தேர்தல் நடைபெறும் என்றார்.இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் நாள் தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் முதல் கூட்டம் மார்ச் இரண்டாம் நாள் நடைபெறும் என்றும், மார்ச் 4 ஆம் தேதி அன்று மாநகர மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும், நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மாநகராட்சி உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மாவட்டத்துக்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளார். சென்னைக்கு மட்டும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மூவர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.