​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

Published : Jun 14, 2018 11:10 AM



18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

Jun 14, 2018 11:10 AM

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள் அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் மனு அளித்தனர்.

இதையடுத்து அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், 19 எம்எல்ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் தனபாலுக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். இதில், ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாலேயே ஆளுநரை சந்தித்ததாக விளக்கம் அளித்தார்.

image

எனவே அவரைத் தவிர்த்து 18 எம்எல்ஏ.க்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறுஉத்தரவு வரும் வரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கும், 18 தொகுதிகளை காலியாக அறிவித்து தேர்தல் நடத்துவதற்கும் தடை விதித்தார். 

பின்னர் இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வுக்கும், அதன் பிறகு அரசமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகள் இருப்பதால், தலைமை நீதிபதி அமர்வுக்கும் மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். 

image

தமிழக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்ஹி ஆஜராகி வாதிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை போலதான் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டதாகவும், அது கட்சி தாவல் இல்லை என்றும் வாதிட்டார்.

எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவரை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பகல் 1 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.