​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 வயதிற்கு மேற்பட்டோருக்கும்... கொரோனா தடுப்பூசி..!

Published : Apr 19, 2021 7:15 PM

18 வயதிற்கு மேற்பட்டோருக்கும்... கொரோனா தடுப்பூசி..!

Apr 19, 2021 7:15 PM

நாட்டில் 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 2வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும், எஞ்சிய 50 சதவீதத்தை மாநில அரசுகள் மற்றும் வெளிசந்தைக்கும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்யும் தடுப்பூசி இந்த கணக்கில் சேராது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

வெளிசந்தை மற்றும் மாநில அரசுகளுக்கு விற்கப்படும் தடுப்பூசியின் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படையாக மே ஒன்றாம் தேதிக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்றும், அதன்படி தனியார் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள், கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் மற்றும் விரைவாக தடுப்பூசி போடப்படும் திறனைப் பொறுத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் தடுப்பூசி முகாம்களில் எப்போதும் போல் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.