​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..!

Published : Mar 05, 2021 9:42 PMசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..!

Mar 05, 2021 9:42 PM

சென்னையில் பதின்பருவ சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கர்ப்பிணியானதும் கைவிட்டு செல்வதை வழக்கமாக்கிய கானா பாடகரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏழை சிறுமிகளை ஏமாற்றிய கானா புள்ளீங்கோ கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ரெண்டு பக்கமும் கிராபிக்ஸ் புலியுடன், நடுவில் ஒட்டடை துடைப்பம் போன்ற ஹேர் ஸ்டைலுடன் நிற்கும் இவர் தான் அச்சிரப்பாக்கம் கானா புள்ளீங்கோ திரு என்கிற திருமலை.

சாவு வீட்டில் கானா பாடல் பாடி அதனை யூடியூப்பில் பதிவிட்டு வந்த திருமலைக்கு தன்னை பார்த்து சிரிக்கும் பதின் பருவ சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்துவது வாடிக்கை என்று கூறப்படுகின்றது.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திருமலை மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அச்சரபாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான திருமலை தன்னை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் தன்னை கைவிட்டு சென்றதாக கூறியிருந்தார்.

கானா திருமலையை பிடித்து விசாரித்த போது அவன் அந்த பகுதியில் சின்ன பொண்ணுங்களை காதலித்து ஏமாற்றி செல்லும் திருட்டு ரோமியோவாக வலம் வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னையில் கானா பாடல்களை பாடி யூடியூப்பில் பதிவிட்டு வந்த திருமலை, ஓட்டேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகின்றது. தனக்கு தெரிந்த பதின்பருவ சிறுமிகளின் செல்போனுக்கு, தெரியாமல் அழைத்து விட்டது போல தொடர்பு கொண்டு பேசும் திருமலை, அதில் பேசும் சிறுமியிடம் உன் குரல் நன்றாக இருக்கின்றது என்று கூறி மயக்குவான்.

பின்னர் அந்த சிறுமிகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்து நானும் சென்னையில் தான் இருக்கின்றேன் என்று கூறி காதல்வலை விரிப்பான், சில நாட்கள் போனில் மணிக்கணக்கில் காதல் மொழி பேசும் திருமலை தன்னை நேரில் வந்து சந்திக்க சம்மதிக்காத சிறுமிகளிடம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி சம்பந்தப்பட்ட சிறுமியை காதல் வலையில் வீழ்த்துவான் என்று கூறப்படுகின்றது. பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி தனது சொந்த ஊரான அச்சரப்பாக்கத்திற்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி குழந்தை பிறந்த உடன் அவர்களை கழட்டி விடுவதை வாடிக்கையாக்கி இருப்பது தெரியவந்தது.

இதே போல கொடுங்கையூர் பகுதியில் பொம்மை கடையில் வேலைக்கு சென்று வந்த 17 வயது சிறுமியிடம் பழகி அவளையும் திருமணம் செய்து கொண்டு வீதியில் தவிக்கவிட்டுள்ளான். இதே போல் அயனாவரம் பகுதியில் ஒரு சிறுமியை காதலிப்பது போல நடித்து அவரை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் என்பதால் இவன் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்ததால், ஸ்ப்ரிங் தலைக்கு டை அடித்த இந்த கலர் குருவியின் சாயம் வெளுத்துள்ளது.

சங்கீத சக்கரவர்த்தி என்ற நினைப்பில் தனது கர கர குரலால் கானாவை கருணை கொலை செய்துவந்த திருமலை, சிறுமி அளித்த புகாரால் புழல் சிறையில் கம்பிகளுக்கு பின்னால் சோகம் கீதம் இசைத்து வருகின்றான்.

அதே நேரத்தில் பதின்பருவ சிறுமிகள் படிப்பை மறந்து, பாலினக்கவர்ச்சியால் இது போன்ற காதல் ரோமியோக்களை நம்பி வீட்டை விட்டு சென்றால் வீதியில் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.