​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக உடனான தொகுதி பங்கீடு.! காங்கிரஸ் தொடர் ஆலோசனை.!

Published : Mar 04, 2021 8:08 PM

திமுக உடனான தொகுதி பங்கீடு.! காங்கிரஸ் தொடர் ஆலோசனை.!

Mar 04, 2021 8:08 PM

திமுக, தனது கூட்டணி கட்சியான காங்கிரசோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

பரஸ்பர பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றாலும், தொகுதி பங்கீட்டில், இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் 40க்கும் அதிகமான தொகுதிகளை கேட்பதாக கூறப்படும் நிலையில், திமுக தரப்பில், 30 தொகுதிகளுக்குள்ளாக ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறப்படுகின்றது.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட தலைவர்களுக்குள் இருவேறு கருத்துகள் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 காங்கிரஸ் மாவட்டங்களின் தலைவர்களை, சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். தனித்தனியாகவும் சந்தித்துப் பேசினார்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், காலை முதல் மாலை வரையில் நீண்ட ஆலோசனையின்போது, பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், திமுகவிடம் இருந்து கெளரவமான இடங்களை கேட்டுப் பெற கோரியதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், கடைசி நேரத்தில் திமுகவை வலியுறுத்தி அதிக தொகுதிகளை கேட்பதை விட, கொடுக்கும் தொகுதிகளில் நிற்பதே, தற்போதைய சூழலில் சாலச்சிறந்தது என்றும், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களில் ஒருபிரிவினர் கூறுவதாக, கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறுகிறது.

மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கும் இந்த செயற்குழுவில், திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த முடிவு இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.