அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி, மார்ச் 3-ம் தேதிவரை அதிமுகவில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. மொத்தமாக 8,250 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு வழங்கிய அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட அதிமுகவின் ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்தி வருகிறது.
முற்பகலில் தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. பிற்பகலில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. விருப்ப மனு பூர்த்தி செய்து வழங்கியவர்கள் பணம் கட்டியதற்கான அசல் ரசீதுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேர்காணலின் போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கி வருவதால் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் இது எனக்குறிப்பிட்ட முதலமைச்சர், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது ஆட்சியை எந்த வித குறையில்லாமல், அடிபிரழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார்.