​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டாலின் வேலைப் பிடித்தாலும் கடவுளின் வரம் கிடைக்காது - முதலமைச்சர்

Published : Jan 24, 2021 10:10 AM

ஸ்டாலின் வேலைப் பிடித்தாலும் கடவுளின் வரம் கிடைக்காது - முதலமைச்சர்

Jan 24, 2021 10:10 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முருகனின் வேலைப் பிடித்தாலும் கடவுள் அவருக்கு வரம் தர மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இரண்டு நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் நாள் பிரச்சாரத்தைத் தொடங்குமுன் இன்று புலியகுளம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.

சிங்காநல்லூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடவுளை இழிவாகப் பேசியவர்கள் தற்போது கையில் வேலைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதால் 332 மாணவர்கள் மருத்துவப் படிப்பும் 92 மாணவர்கள் பல்மருத்துவப் படிப்பும் படிக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் அமைதிப் பூங்காவாகவும், தொழில் தொடங்க உகந்ததாகவும் திகழும் மாநிலம் தமிழ்நாடு தான் என அவர் தெரிவித்தார். 

கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் திருப்பூர்,கோவை உள்ளிட்ட தொழில் நகரங்கள் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை காளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரின் குழந்தையை வாங்கிக் கொஞ்சினார். அப்போது அழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டி அமைதிப்படுத்திய பின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

காளப்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் வழியில் கரியாம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார்.

கோவிலுக்கு அருகே அதிமுக தொண்டர் வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார். அன்னூரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,குடிமராமத்துத் திட்டத்தில் ஏரி குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுக் கோடைக்காலத்துக்குத் தேவையான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும், இதனால் அதிமுக மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.