​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை : சிறுத்தையை ஓடவிட்ட வளர்ப்பு நாய்... மிரட்சியில் இருந்து மீளாத பரிதாபம்!

Published : Jan 22, 2021 1:34 PM

கோவை : சிறுத்தையை ஓடவிட்ட வளர்ப்பு நாய்... மிரட்சியில் இருந்து மீளாத பரிதாபம்!

Jan 22, 2021 1:34 PM

கோவை அருகே குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஆடுகளை தாக்கி கொன்றது. அப்போது, சிறுத்தையிடம் இருந்து ஆடுகளை காக்க நாய் ஒன்று முயன்றது.

கோவையை அடுத்த மதுக்கரை காந்திநகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை சீனிவாசன் என்பவர் வீட்டின் சுற்றுச்சுவரின் மீது ஏறி நீண்ட நேரம் நின்றுள்ளது. பின் வீட்டில் இருந்த இருந்த வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்றது. ஆனால், வளர்ப்பு நாய் சிறுத்தையுடன் கடுமையாக போராடியது. இதனால், நாயின் உடலில் இருந்து ரத்தம் வழிந்தது.

இரவில் வெளியே நாய் குலைக்கும் சத்தத்தையும் சிறுத்தை உறுமல் சத்தத்தையும் கேட்டு மக்கள் வீடுகளில் விளக்குகளை போட்டுள்ளனர். இதையடுத்து, சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.வீட்டை விட்டு உரிமையாளர் சீனிவாசன் வெளியே வர, நாய் கால்களில் ரத்தம் வழிய நின்று கொண்டிருந்துள்ளது. எமனுடன் போராடி உயிர் மீண்ட நாயை உரிமையாளர் சீனிவாசன் கட்டி அணைத்துக் கொண்டார். எனினும், சிறுத்தையுடன் நடத்திய உயிர் போராட்டம் காரணமாக நாயிடத்தில் இருந்து மிரட்சி இன்னும் அகலவில்லை.

பின்னர், அடிபட்ட புலியாக அதிகாலையில் அதே பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. அங்குள்ள, ஞானபிரகாஷ் என்பவரது வீட்டில் இருந்த ஆட்டு பட்டிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 4 ஆடுகளை கடித்து கொன்றது. காலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ஞானபிரகாஷ் அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, காந்திநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க கூண்டும் வைத்துள்ளனர்.

வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தையை கண்காணிக்க ரோந்துச் சென்றுள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சிறுத்தை வீட்டின் சுற்றுச்சுவர் மீது நடமாடிய காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மீண்டும் சிறுத்தை அந்த பகுதிக்கு வரும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.