​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை..!

Published : Jan 22, 2021 12:09 PM



முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை..!

Jan 22, 2021 12:09 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூர் - பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை காலை வழக்கம்போல் திறந்து ஊழியர்கள் பணியை தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல், துப்பாக்கியைக் காட்டி, ஊழியர்களை கட்டிவைத்துவிட்டு லாக்கர் சாவியை பெற்று நகைகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துக் கொண்ட அந்தக் கும்பல், அங்கிருந்த 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக ஊழியர்கள் கூறுகின்றனர். கொள்ளை கும்பலைச் சேர்ந்த அனைவருமே தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பட்டப்பகலில் துப்பாக்கியைக் காட்டி அரங்கேற்றப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பெங்களூருவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படும் நிலையில், ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளது.

நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வரும் போலீசார், ஊழியர்கள் யாருக்கேனும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 6 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்து, ஊழியர்களின் கைகளை பின்பக்கமாக கட்டிப் போட்டுவிட்டு, அவர்களை மிரட்டும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

வந்தவர்களில் சிலர் தலைக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருப்பதையும், சிலர் முகக்கவசம் அணிந்திருப்பதையும் காண முடிகிறது. கொள்ளையடித்த பணத்தையும் நகைகளையும் பெரிய பை ஒன்றில் வைத்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது போன்ற காட்சியும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.