முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்திலுள்ள 166 மையங்களில் இதுவரை சுமார் 43 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அரசு திட்டமிட்டதை விட தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதையடுத்து, முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். முன்னதாக, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்ட மருத்துவர் என்ற அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு மேலும் 1,69,920 கோவேக்சின் டோஸ்கள் இன்று வர இருக்கிறது என்று தெரிவித்த அவர், இதுவரை 907 பேர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், தான் 908ஆவது நபர் என்றும் கூறினார்.
தடுப்பூசியைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதால் அதை போட்டுக்கொள்வதில் தயக்கம் உள்ளது என்றும், அப்படி தயக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகவே மருத்துவ முன்னோடிகள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
அமைச்சர் காமராஜர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது இருப்பதாகவும் விஜயபாஸ்கர் கூறினார்.