​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
103 வயதிலும் வாக்குரிமையை பதிவு செய்த சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு!

Published : Jan 18, 2021 8:28 AM



103 வயதிலும் வாக்குரிமையை பதிவு செய்த சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு!

Jan 18, 2021 8:28 AM

இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த 103 வயதான சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடியில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் 103 வயதான ஷியாம் சரண் நேகி. 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கின்னார் மாவட்டம் மண்டி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்பா பகுதியில் இருந்த வாக்குச்சாவடியில் பள்ளி ஆசிரியராக இருந்த ஷ்யாம் சரண் நேகி அன்று அதிகாலையிலேயே காத்திருந்து சரியாக காலை 7 மணிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார். அதுமுதல் இவர் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார்.

இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பிராண்ட் அம்பாசிடராக இந்திய தேர்தல் ஆணையத்தால் கருதப்பட்டார். இவர் எப்போது தேர்தல் நடந்தாலும் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தவறுவதில்லை. அதோடு ஷியாம் நேகி வாக்கு செலுத்தப் போகும் ஒவ்வொரு முறையும் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற முறையில் தேர்தல் அதிகாரிகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ‘

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று இமாச்சலப்பிரதேசத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வயது முதுமை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் நல குறைவுக்கிடையிலும் எதையும் பொருட்படுத்தாமல் பொறுப்புடன் வந்து வாக்களித்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடியில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.