ராமநாதபுரத்தில் தன்னுடைய வீட்டுக்கு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி எம்.எல்.ஏ மணிகண்டன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகரில் எம்எல்ஏ மணிகண்டன் வீடு வண்டிக்காரத் தெரு பகுதியில் உள்ளது. இந்த தெருவுலக்கு அருகில் 26வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வண்டிக்கார தெரு முழுவதும் தேங்கியது. ஆனால், நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் , அந்த பகுதியே துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து மணிகண்டன் எம்எல்ஏ அந்த பகுதியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
ஆளுங்கட்சி எம்.எல், ஏ ஒருவரே தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தனியார் கழிவுநீர் வாகனம் மூலம் நகராட்சி ஊழியர்கள் கழிவுநீரை வெளியேற்றியதால் மணிகண்டன் தன் தர்ணாவை முடித்துக் கொண்டார். எம்.எல்.ஏ வே போராட்டத்தில் ஈடுபட்டுதான் காரியத்தை சாதிக்க முடிகிறது என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதிகாரிகளின் அலட்சியப் போக்குக்கு கண்டணமும் எழுந்துள்ளது.