”டெல்லிக்கு வரும் சாலைகள் மூடல்” விவசாயிகள் தொடர் போராட்டம்..!
Published : Nov 30, 2020 1:21 PM
டெல்லிக்கு வரும் சாலைகள் மூடப்பட்டுப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளின் முன் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்யும் முறைக்குப் புதிய வேளாண் சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் கடந்த 4 நாட்களாக டெல்லியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
அவர்களை முதலில் தடுத்த காவல்துறையினர், பின்னர் டெல்லி புராரி நிரங்காரி மைதானத்தில் அமைதியாகப் போராட்டம் நடத்த அனுமதித்தனர். எனினும் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே மைதானத்துக்குச் சென்றனர்.
விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்தார். இருப்பினும் டிராக்டர்களில் உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அரியானா எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி சோதனைச்சாவடிகள் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குருநானக் பிறந்த நாள் என்பதால் போராட்டக் களத்திலேயே வழிபாடும் நடத்தினர்.
இதனிடையே அரியானா, உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தடுப்புகளை ஏற்படுத்திய காவல்துறையினர், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்துள்ளனர்.
போராட்டத்துக்கு அரசு அனுமதித்த இடமான நிரங்காரி மைதானத்திலும் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான முகாம்களை டெல்லி அரசு அமைத்துள்ளது.
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் டிசம்பர் மூன்றாம் நாள் பேச்சு நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில், அவர் டெல்லியில் அவசரமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் அவரைச் சந்தித்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகளுடன் எந்த வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் அந்த பேச்சுவார்த்தை நடக்கும் என கூறியுள்ள அவர், அதே நேரம், விவசாய விளைபொருட்களுக்கான எம்எஸ்பி எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Delhi: Medical check-up camp setup at Singhu Border where farmers are protesting against the farm laws.
— ANI (@ANI) November 30, 2020
"We should conduct COVID-19 test here. If there's any possibility of a super spreader, the disease might spread to other people which will be disastrous," says a doctor. pic.twitter.com/QwFoqSADh4