​​ கடன்சுமையால் திவால் ஆனதாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடன்சுமையால் திவால் ஆனதாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் கோரிக்கை

கடன்சுமையால் திவால் ஆனதாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் கோரிக்கை

Mar 01, 2018 12:56 AM

கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏர்செல் செல்போன் சேவை நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, திவாலாகும் சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனால், ஜனவரி 31 ஆம் தேதியுடன், குஜராத், ஹரியானா, இமாசலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏர்செல் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இருந்ததால், ஏர்செல் இங்கு தனது சேவையை நிறுத்தாமல் கடும் போராட்டத்திற்கிடையே தொடர்ந்து வழங்கி வந்தது. ஆனால்,  செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தர இயலாததால், ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதன் எதிரொலியாக ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முற்றிலுமாக முடங்கியது.

பின்னர் ஏர்செல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் பெரு நகரங்களில் உள்ள 75% டவர்கள் தற்காலிகமாக செயல்படத் தொடங்கினாலும்,  பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.  இதனால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்ள வேண்டும் என்றும் சங்கரநாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம், தன்னை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. பங்குதாரர்களிடமும், கடன் வழங்கிய நிறுவனங்களிடமும் நடத்திய பேச்சு வார்த்தையில், சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான மாற்று முயற்சிகள் குறித்து எந்த முடிவுக்கும் வர இயலாததால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.