​​ சேலம் மணிப்பால் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் மணிப்பால் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

சேலம் மணிப்பால் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

Feb 28, 2018 11:58 PM

இளைஞரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரது இரண்டு கிட்னி, இரண்டு கண்கள் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பேரம் பேசி வாங்கியதாக சேலம் மணிபால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த நரிப்பள்ளத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன், கட்டிடதொழிலாளி . இவர் கடந்த ஞாயிற்று கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசுப் பேருந்து மோதியதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று அவரை மீட்டு அவசர அவசரமாக எடுத்துச்சென்றனர்.

அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இரு தினங்களாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை நிர்வாகம், ஸ்ரீரங்கன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தது. மேலும் 50 ஆயிரம் ரூபாய் மருத்துவ கட்டணம் செலுத்திவிட்டு அவரது உடலை எடுத்துச் செல்லலாம் அல்லது அவரது உடல் பாகங்களை தானம் செய்தால் பணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக ஆசை காட்டியதாக கூறப்படுகின்றது.

ஆனால் போதிய படிப்பறிவில்லாத ஸ்ரீரங்கன் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் உதவி கேட்க, அவரை மத்தியஸ்தராக வைத்து ஸ்ரீரங்கனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் குறிப்பிட்ட தொகை பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி ஸ்ரீரங்கன் குடும்பத்தாரிடம் 2 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு இரு கிட்னி, இரு கண்கள், இருதயம் ஆகியவற்றை தானமாகப் பெறுவது போல எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளனர். பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு விற்பனை என்பது சட்டவிரோதம் என்று சொல்லப்பட்டாலும், அது தானம் என்ற பெயரில் இன்று வரை தொடரவே செய்கிறது. அதிலும் மூளைச்சாவு என்ற ஒற்றை வார்த்தையை சுட்டிக்காட்டி ஏராளமான நபர்களின் உடல் உறுப்புகள், வசதி படைத்த நோயாளிகளுக்கு விலைபேசி வாங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ரோஹினியிடம் கேட்டபோது, அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையின் சேலம் மாவட்ட துணை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர், உடல் உறுப்புகள் விற்பனை குறித்த புகாருக்குள்ளான மணிபால் மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர். சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய இந்தக் குழு, ஸ்ரீரங்கன் உடல் உறுப்புகள் விற்பனை குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது.

மணிபால் மருத்துவமனையில் இதுவரை நடத்தப்பட்ட உடல் உறுப்புகள் தானம் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.