​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் - முதலமைச்சர்

Published : Sep 22, 2020 3:30 PM

வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் - முதலமைச்சர்

Sep 22, 2020 3:30 PM

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களில் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் அம்சங்கள் இருப்பதாலேயே  ஆதரிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ராமநாதபுரம் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.  பயனாளிகளுக்கு 72 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளுடன், கொரோனா தடுப்பு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், விவசாயிகள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 14ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரப்பிரசாதமாக அமையும் என்றார்.

அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாநிலங்களவையில் பேசியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார். மசோதாக்களுக்கு அதிமுக ஏன் ஆதரவு அளித்தது என்றும் விளக்கம் அளித்தார்.