​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரிபுரா நிதி நிறுவன மோசடி - சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Published : May 24, 2018 2:37 AM

திரிபுரா நிதி நிறுவன மோசடி - சொத்துக்களை முடக்க நடவடிக்கை

May 24, 2018 2:37 AM

திரிபுரா ஏலச்சீட்டு நிறுவன மோசடி தொடர்பான புகாரில், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க சென்னை பொருளாதார குற்றவியல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

தென்னிந்தியாவின் 6 மாநிலங்களில் கிளைபரப்பி பிரமாண்டமாக செயல்பட்டு வந்த திரிபுரா ஏலச்சீட்டு நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அந்நிறுவனத்தில் பணம் செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். நாள்தோறும் வசூல் அதிக முதிர்வுத்தொகை என கவர்ச்சிகரமான திட்டங்களுடன் செயல்பட்ட திரிபுரா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் முதலே வாடிக்கையாளர்களுக்கான முதிர்வுத்தொகையை செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

சென்னை கிண்டியில் இயங்கும் பொருளாதார குற்றவியல் காவல்துறையில் மட்டும் 3 ஆயிரம் வாடிக்கையாளர்களின் புகார்களின் பேரில் 75 கோடி ரூபாய் மோசடி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவன உரிமையாளரான கிருஷ்ணபிரசாத், அவரது மனைவி சுபன்னா, அந்நிறுவனத்தின் இயக்குநர் வேலு ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் பொருளாதார குற்றவியல் காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாய் வரையிலும் திரும்ப செலுத்தவேண்டியிருப்பது தெரியவந்தது.

மேலும் ரிசர்வ் வங்கியில் முறையாக பதிவு செய்யாமல் நிறுவன கிளைகளை இயக்கியதாகவும், அந்தந்த பகுதி சார்பதிவாளர்களிடம் வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள ரூ.2.71 கோடி ரூபாய் தொகையை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று திரிபுரா உரிமையாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்றது.

இதில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் கண்டு தமிழக உள்துறை செயலாளரிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து இந்த சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான தொகை வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ((Gfx out))இதனிடையே பணத்தை பறி கொடுத்தவர்கள் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரிபுரா நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில் மண்டல மேலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் பணத்தை கையாடல் செய்ததாலேயே நிறுவனம் திவாலாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலாளராக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த வாசு, கர்நாடகாவைச் சேர்ந்த கரும்பையா, பாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

இவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவின் தொலைபேசி எண்ணான 044 22504332 மற்றும் 9498197725 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.