சட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டியெடுத்த வழக்கில், பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்த மேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
மேலூர் அருகே சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுக் கீழையூரில் தனியார் நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியராக அன்சுல் மிஸ்ரா இருந்தபோது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, அவர் மகன் சுரேஷ்குமார், சகாதேவன் ஆகிய மூவரை மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி 2016ஆம் ஆண்டு விடுவித்தார்.
அத்துடன், அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார். இதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மேலூர் நீதித்துறை நடுவர் உத்தரவுகளை ரத்து செய்தார். இரு தரப்பிலும் வாதங்களைப் பெற்று 2 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்கக் கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.