​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்களூரில் வன்முறை - போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

Published : Aug 12, 2020 8:43 AM

பெங்களூரில் வன்முறை - போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

Aug 12, 2020 8:43 AM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு புலகேஷி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏவான அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் எனக் கூறப்படும், நவீன் என்பவர் சமூக வலைதளங்களில் ஒரு மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து எம்.எல்.ஏ வீட்டு முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல், அங்கிருந்த சுமார் 10 வாகனங்கள் மட்டுமின்றி வீட்டிற்கும் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

இதனிடையே, அங்கு வந்த போலீசார் நவீனை கைது செய்து விட்டதாகவும், அவர் எம்.எல்.ஏவின் உறவினர் கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஏராளமான போராட்டக்காரர்கள் கே ஜி ஹள்ளி மற்றும் டி ஜே ஹள்ளி ஆகிய காவல் நிலையங்களை முற்றுகையிட்டனர். திடீரென கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு, தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 போலீசார் காயமடைந்துள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, உள்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.