நள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..!
Published : Aug 03, 2020 5:16 PM
நள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..!
Aug 03, 2020 5:16 PM
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நடந்த பூஜையில் பலி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட கருப்புப் பூனை தப்பியோடி விட, அதற்குப் பதிலாக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. போலிச் சாமியாரிடம் இருந்து தனது 5 மாத குழந்தையை தாய் போராடி காப்பாற்றிய நிலையில், குழந்தையின் தந்தை, பாட்டி, போலிச் சாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த சடையமான்குளத்தைச் சேர்ந்தவர் 70 வயதான பார்வதி. மாந்திரீக விஷயங்களில் நம்பிக்கை கொண்டவரான பார்வதியின் வளர்ப்பு மகன் குமரேசன்.
குமரேசனுக்குத் திருமணமாகி 7 வயதிலும் 5 வயதிலும் 5 மாத கைக்குழந்தையாகவும் 3 மகன்கள் உள்ளனர். மூதாட்டி பார்வதிக்கு கிரான ராஜன் என்ற போலிச் சாமியாருடன் நீண்ட கால பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது பார்வதி வீட்டில் நள்ளிரவில் பூஜைகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. பூஜை குறித்து கேள்வி கேட்டால் சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்த நிலையில் பார்வதி வீட்டில் புதையல் இருப்பதாக ஆசை காட்டிய கிரான ராஜன், அதனை எடுத்துத் தருவதாகக் கூறி அவரிடம் 2 லட்ச ரூபாய் பணமும் வாங்கியுள்ளான்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புதையல் எடுப்பதற்கான பூஜை நடந்துள்ளது. பூஜையின்போது பலி கொடுப்பதற்காக கருப்புப் பூனை ஒன்றும் கோழி ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது.
நடு வீட்டுக்குள் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் எலுமிச்சை உள்ளிட்ட பூஜைப் பொருட்களை போட்டு பூனையை பலி கொடுக்க முயன்றபோது பூனை தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பூனையை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குமரேசனின் 5 மாத கைக்குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என கிரான ராஜன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பார்வதியும் குடிபோதையில் இருந்த குமரேசனும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தையின் தாயான குமரேசனின் மனைவி ராமலட்சுமி ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதற்காக அவருக்கு தீர்த்தம் கொடுப்பதாகக் கூறி மயக்க மருந்தை கிரான ராஜன் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மூன்று பேரின் நடவடிக்கைகளைப் பார்த்து உஷாரான ராமலட்சுமி, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்து தெருவில் கூச்சல் போட்டுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு கிரான ராஜன், பார்வதி, குமரேசன் ஆகியோரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் பச்சிளம் குழந்தையை பலி கொடுக்க பெற்ற தந்தையே ஒப்புக்கொண்ட கொடூரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.