​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே தெருவில் வசித்த இரு பெண்கள் கத்தி முனையில் பலாத்காரம்

Published : May 23, 2018 11:06 AM

ஒரே தெருவில் வசித்த இரு பெண்கள் கத்தி முனையில் பலாத்காரம்

May 23, 2018 11:06 AM

சென்னையில் ஒரே பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் உட்பட இரு பெண்களை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருவண்ணாமலையை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் சென்னையில் மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அண்ணாநகர் மேற்கு, பாடி புதுநகரில் தனியாக வசித்து வரும் அந்த பெண் அம்பத்தூரில் உள்ள தனது நிறுவனத்திலிருந்து திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் அவர் வீட்டிலிருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டதையடுத்து பொதுமக்கள் திரண்டனர்.

அப்போது தன்னை ஒருவர் கத்தி முனையில் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார். அந்த பெண் வசிக்கும் வீட்டிற்கு வெளியில் கழிவறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 2 மணியளவில் அறையில் இருந்து வெளியில் வந்து கழிவறைக்கு சென்று திரும்புவதற்குள் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைந்துள்ளான். அந்த பெண் அறைக்குள் நுழைந்ததும் கதவிற்கு பின்னால் பதுங்கியிருந்த அந்த நபர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், காவல் நிலையத்திற்கு வந்த மற்றொரு பெண் தன்னையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தி முனையில் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் பலாத்காரம் செய்யப்பட்ட மென் பொறியாளர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர் என்பது தெரிந்து விசாரணை நடத்திய போலீசார் குழப்பமடைந்தனர்

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஞாயிற்று கிழமை அன்று இரவு பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார், மாமியார் இருவரும் வெளியூர் சென்றிருந்ததால் இரு குழந்தைகளுடன் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் தங்கியிருக்கும் குடியிருப்பிலும் இரண்டு வீடுகளுக்கு சேர்த்து பொதுவான கழிப்பறை தான் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்த பெண் நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக வெளியில் வந்த போது அதற்குள் ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார்.

வீட்டிற்குள் அந்த பெண் நுழைந்தபோது, உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் ஒரு நபர் கத்தியை கத்தியை வைத்து சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியுள்ளான். அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் அந்த நபர். இந்த சம்பவம் நடந்து இரு நாட்கள் ஆன நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்வதற்கு பயந்து புகார் அளிக்காமல் இருந்ததாக கூறியுள்ளார். அதற்குள் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்ட பிறகு தான் தனது உறவினர்களிடம் தெரிவிக்க புகார் அளித்துள்ளனர்.

முதலில் பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லாததால் தைரியம் ஏற்பட்டு அந்த நபர் மற்றொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து சந்தேகத்திற்கிடமான பாதிக்கப்பட்ட பெண்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது