​​ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

May 22, 2018 7:02 AM

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்ட அறிவிப்புகளை அடுத்து நகரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு தூத்துக்குடி வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இன்று தூத்துக்குடி முழுவதும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வணிகர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம், கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம், மற்றும் சிப்காட் காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற 300க்கும் மேற்பட்ட பெண்களை கடற்கரைச்சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலை மாறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பனிமய மாதா பேராலயம் வரை மட்டும் பேரணியாகச் செல்ல போலீசார் அனுமதித்தனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.