​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அச்சம் தரும் கொரோனா மீண்டும் உயரும் பாதிப்பு

Published : Jul 09, 2020 6:23 PM

அச்சம் தரும் கொரோனா மீண்டும் உயரும் பாதிப்பு

Jul 09, 2020 6:23 PM

தமிழகத்தில் மெல்ல குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் சற்று உயரத் துவங்கி விட்டது. அதிகபட்சமாக ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.   

தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 42 பேர், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 103 பேர் உள்பட ஒரே நாளில், 4 ஆயிரத்து 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 47 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு மத்தியில், ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்திய சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் 23 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். திருவண்ணாமலையைச்சேர்ந்த 25 வயது இளம்பெண் மற்றும் 12 பெண்கள் உள்பட 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 6 பெண்கள் உள்பட 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். எனவே, கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 765 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.