​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிறந்த நாள் கொண்டாட்ட அலப்பறை.. சாணி கரைசல் அபிஷேகம்..!

Published : Jul 09, 2020 4:51 PM



பிறந்த நாள் கொண்டாட்ட அலப்பறை.. சாணி கரைசல் அபிஷேகம்..!

Jul 09, 2020 4:51 PM

கன்னியாகுமரியில் முட்டை, தக்காளி மாட்டுச்சாண கரைசலுடன் இளைஞர் ஒருவருக்கு அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிறந்தநாளன்று காலையில் எழுந்து அவரவர் இஷ்ட தெய்வதை வழிபட்டு, பெற்றோரிடம் ஆசி வாங்கி குடும்பத்தோடு உணவு உண்டு கொண்டாடிய நிலை தற்போது மாறி வருகிறது.

மது விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம், சிலர் அரசு வாகனங்கள் முன் நின்று டிக் டாக் செய்து கொண்டாடுவது... என வித விதமாக பிறந்த நாள் கொண்டாடி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். ஒருசில ரவுடிகள் பட்டா கத்தி கொண்டு கேக் வெட்டி சக ரவுடிகளுடன் கொண்டாடுவதும்,அதுவே அவர்களுக்கு வினையாக மாறி காவல்துறை வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை என்னும் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து, அந்த பகுதியை சேர்ந்த அவர்களின் நண்பரான பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரின் பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளனர். முதலில் கேக் வெட்டி கொண்டாடியவர்கள், இரவு திடீரென பர்த்டே பேபியை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து, அவரது உடலில் தயிர், முட்டை, தக்காளி, போன்றவற்றை அடித்து பூசியுள்ளனர்.

மாட்டு சாணி கரைசலை தலையில் ஊற்றியும் அபிஷேகம் செய்துள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த இளைஞர்கள் விழிப்புணர்வின்றி ஒன்று கூடி வினோத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.