​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Published : Jun 03, 2020 6:32 PM

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Jun 03, 2020 6:32 PM

தமிழகத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 286 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்குகிறது. புதிய உச்சம் தொட்ட கொரோனாவால் 4ஆவது நாளாக தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு மேல், பாதிக்கப்பட்டு உள்ளனர். 

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 286 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 2 பேர், துபாயில் இருந்து திரும்பிய 13 பேர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் வந்து சேர்ந்த
27 பேரும் அடங்குவர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நோக்கி, உயர்ந்து வருகிறது.

ஓரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு11 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

58 வயது பெண் ஒருவர், சென்னை - ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

70 வயது பெண் ஒருவர், திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலமானார். காஞ்சியை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர், செங்கற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சென்னையில் 3 ஆண்கள், தனியார் மருத்துவமனைகளில் மரணம் அடைந்தனர். இவர்களில் பலர், கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, வேறு வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, மரணத்தை தழுவியதாக சுகாதாரத்துறை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 300 - ஐ தாண்டி உள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில 684 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 437 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 963 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 536 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக, ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்ந்துள்ளது. எனவே, மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறை, முழு மூச்சுடன் களமிறங்கி உள்ளது.