​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி

Published : May 29, 2020 6:05 PM

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி

May 29, 2020 6:05 PM

தமிழகத்தில், ஒரே நாளில் 765 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தை கிடுகிடுக்க செய்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 874 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 141 பேரும் அடங்குவர். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரு பெண்கள் உள்பட 5 பேரும், திருவள்ளூரைச்சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 22 மாவட்டங்களில், புதிதாக ஒருவருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், கோவை, பெரம்பலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை முடிந்து, அனைவரும் வீடு திரும்பி விட்டதால், அங்கு ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 578 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 ஆயிரத்து 232 பெண்கள் உள்பட மொத்தம் 17 ஆயிரத்து 237 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 694 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 806 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மிரட்டும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டும் பணியில் சுகாதாரத்துறையினர், தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.