​​ 100 கோடி ரூபாயுடன் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி -குமாராசாமி குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 கோடி ரூபாயுடன் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி -குமாராசாமி குற்றச்சாட்டு

100 கோடி ரூபாயுடன் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி -குமாராசாமி குற்றச்சாட்டு

May 16, 2018 12:38 PM

100 கோடி ரூபாய், அமைச்சர் பதவி என மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் நோக்கில், 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய இந்த புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்திற்கும் கூடுதலாக எம்எல்ஏ.க்கள் இருப்பதாலும், முதலமைச்சர் வேட்பாளராக தாம் முன்னிறுத்தப்படுவதாலும் குமாரசாமி ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளார். 

இந்நிலையில், பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த கூட்டத்தில் ராஜா வேங்கடப்பா நாயக்கா ((Raja Venkatappa Nayaka)), வெங்கட்ட ராவ் நடகவுடா ((Venkata Rao Nadagouda)) ஆகிய இரு எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைமையால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்எல்ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அவசரத்தில் பாஜக செயல்படுவதாக கூறினார்.

மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டப்படுவதாகவும், 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ((பாஜக எம்எல்ஏ.க்கள் சிலர் அங்கிருந்து விலகி தங்களுடன் இணைய தயாராக இருப்பதாக கூறிய குமாரசாமி, தங்களிடமிருந்து ஒரு எம்எல்ஏ-வை பாஜக இழுத்தால், அதே வேலையை தாங்களும் செய்து பாஜக-விடமிருந்து 2 எம்எல்ஏ.க்களை இழுப்போம் என எச்சரித்தார். குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும் ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார்.))

மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்ததாலேயே பாஜகவிற்கு 104 தொகுதிகள் கிடைத்ததாகவும் குமாரசாமி குறிப்பிட்டார். மேகாலயா, மணிப்பூர், கோவாவில் ஆட்சிகளைப் பறித்துக்கொண்ட பாஜக, தற்போது கர்நாடகத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குறை கூறினார். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த குமாரசாமி, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் விளக்கம் அளித்தார்.