​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்திற்கு ரூ.12ஆயிரம் கோடி - முதலமைச்சர் கோரிக்கை...

Published : Apr 02, 2020 4:59 PM



தமிழகத்திற்கு ரூ.12ஆயிரம் கோடி - முதலமைச்சர் கோரிக்கை...

Apr 02, 2020 4:59 PM

வென்டிலேட்டர்கள், என்-95 மாஸ்க்குகள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாயும், கொரோனா சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஹர்ஷவர்தனும் பிரதமரோடு ஆலோசனையில் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரடங்கு, புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், மாநில அரசுக்கு தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.

கொரோனா பரிசோதனைக்கான டெஸ்ட் கிட் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை போதிய எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், இவற்றை வாங்குவதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

தாம் ஏற்கெனவே எழுதிய கடிதத்தின்படி, 9 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மாநில ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 33 சதவீதம் கூடுதல் கடன்பெற அனுமதிக்க வேண்டும், மாநிலங்களுக்கு தர வேண்டிய மானியத்தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான, நிதிக் குழு மானியங்களில் 50 சதவீதத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரிக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் வசதி 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதை இரட்டிப்பாக்க வேண்டும், நடப்பு நிதியாண்டுக்கு அதை வட்டியில்லாமல் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.