​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published : Apr 02, 2020 12:09 PM



கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

Apr 02, 2020 12:09 PM

கொரோனா தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள், தேவையான உதவிகள் உள்ளிட்டவை குறித்து, பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்  வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார். 

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரடங்கு, புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், மாநில அரசுக்கு தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்,பி உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுடன் இணைந்து வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்று நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 144 தடை உத்தரவை மீறி வெளியே வருவோர் மீது நடவடிக்கைகளை கடுமையாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.