​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

Published : Mar 30, 2020 9:24 AM

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

Mar 30, 2020 9:24 AM

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே  சுகாதார அமைச்சகம் தொற்று அதிகம் பரவும் இடங்களை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் அவற்றை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

கொரோனாவால் இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளை மூடி சீல் வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதை தடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா, ராம்விலாஸ் பாஸ்வான், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். பல ஆயிரம் பேர் வேலையில்லாததால் சொந்த கிராமங்களுக்கு படையெடுத்த நிலைமை குறித்து நீண்ட நேர விவாதம் நடத்தப்பட்டது.

இதையடுத்து பல்வேறு முக்கிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.மாநில எல்லைகளை சீல் வைத்து நெடுஞ்சாலையில் செல்வோரை தடுத்து நிறுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் கையிருப்பை பத்து நாட்களுக்கு வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் அவசர பணிகளுக்காக சரக்கு விமானங்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முகாம்களை அமைத்து அவர்களுக்குஉணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியறுத்தியுள்ளது.தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றும் அவர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி உரிய நேரத்தில் கொடுக்கும்படியும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.