​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு

Published : Mar 29, 2020 10:34 AM

கொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு

Mar 29, 2020 10:34 AM

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கையும் 26ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 45 வயது நபர் ஒருவர் இன்று உயிரிழந்ததால், அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் இன்று காலை கொரோனா பாதித்த நபர் பலியானார். இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா பாதித்த 40 வயது பெண் இன்று உயிரிழந்தார். இந்த 3 பேரையும் சேர்த்து, நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் நாட்டின் பல இடங்களில் புதிதாக 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

கேரளாவில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் இதுவரை 187 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடுக்கி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏ.பி. உஸ்மானுக்கு நோய்த் தொற்று பரவியது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உஸ்மான் வெளிநாடு செல்லவில்லை என்ற போதும் அவர் உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளார். அவர் மூலமே அவருக்கு இந்த நோய் பரவியதாக கருதப்படுகிறது.

ஆனால் உஸ்மான் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்து மசூதியில் மக்கள் கூட்டத்தில் தொழுகை நடத்தி, ஆயிரக்கணக்கானோருடன் பேசியிருப்பதால் எத்தனை பேருக்கு அவர் மூலம் நோய் பரவியது என்று கணிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

மும்பையில் 85 வயது மருத்துவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து மகாராஷ்டிராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. மும்பையின் ஜாம்பிபாடா பகுதியில் வெளிநாடு செல்லாத 37 வயது நபருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குடிசைப் பகுதியில் வசிப்பதால் அவரைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை, புனே, நாக்பூர், சாங்க்லி ஆகிய இடங்களில் புதிதாக 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க டெல்லி திகார் சிறையில் இருந்து 356 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.