​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடை விடுமுறை..! சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

Published : May 13, 2018 8:39 PM

கோடை விடுமுறை..! சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

May 13, 2018 8:39 PM

கோடை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடல்காற்றை அனுபவிக்கும் அவர்கள், கடலில் குளித்து மகிழ்கின்றனர். கடலில் உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை அவர்கள் படகில் சென்று கண்டு ரசித்து வருகின்றனர். காந்தி மண்டபம், பகவதி அம்மன் கோயில்களிலும் ஏராளமானோர் திரண்டனர்.

image

கன்னியாகுமரியில் மட்டுமின்றி, குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளிர குளிர குளித்து மகிழும் அவர்கள், நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்கின்றனர். அங்குள்ள பூங்காவில் குடும்பத்தினருடன் அமர்ந்து உரையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

image

சுற்றுலா மாவட்டமாக கருதப்படும் நீலகிரி மாவட்டத்திலும் கூட்டத்துக்கு குறைவில்லை. உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் நேற்று தொடங்கிய ரோஜா கண்காட்சியை பார்வையிட, ஆயிரக் கணக்கானோர் திரண்டுள்ளனர். அங்கு பல்வேறு வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரோஜாக்களை அவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். உதகையில் நகரின் மத்தியில் உள்ள ஏரியில் படகு சவாரி செல்லவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் திரண்டுள்ளனர். பசுமைபோர்த்திய மலைகளின் மீது மேகக்கூட்டம் தவழும் காட்சியின் பின்னணியில் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை போன்ற இடங்களை திரளாளோர் கண்டு ரசிக்கின்றனர். அவ்வப்போது பெய்த சாரல் மழையும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.

image

தேனி மாவட்டத்தையொட்டி, கேரள எல்லையில் உள்ள தேக்கடியில், தமிழகம், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள, புகழ்பெற்ற இந்த சுற்றுலாத் தலத்தில், நீர்த்தேக்கத்தில் படகில் பயணித்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்க முடியும். இதற்காகவும், தேக்கடியில் நிலவும் குளுமையான சூழலுக்காகவும், இரு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர். டைகர் வியூ, நேச்சர் வாக், பார்டர் வாக் போன்ற இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

image

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஒகேனக்கல்லில் திரண்டனர். அங்கு பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்த அவர்கள், எண்ணெய் மசாஜ் செய்யவும், காவிரி ஆற்றிலில் பரிசலில் சவாரி செய்யவும் ஆர்வம் காட்டினர்.

 

image

கோவை அருகே உள்ள புகழ்பெற்ற கோவை குற்றாலம் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை சோதனைச்சாவடியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, அவர்கள் வனத்துறையினரின் வாகனங்களில் ஏறிச்சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த அருவியில், சிறிதளவே தண்ணீர் வந்தபோதிலும், குளிர்ந்த நீரில் அவர்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர்.

image