​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன்னார்குடி டி.எம்.பி வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது-ரொக்கப்பணம் மற்றும் துப்பாக்கி பறிமுதல்.

Published : May 12, 2018 10:09 PM

மன்னார்குடி டி.எம்.பி வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது-ரொக்கப்பணம் மற்றும் துப்பாக்கி பறிமுதல்.

May 12, 2018 10:09 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கிக் கொள்ளை சம்பவத்தில், வங்கி ஊழியர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளைக்கு, கடந்த 7 ஆம் தேதியன்று துப்பாக்கிகளுடன் வந்த, 5 பேர் கொண்ட கும்பல், வங்கி மேலாளர் கோவிந்தராஜ், வங்கிக் கணக்காளர் தியாகராஜன் ஆகியோரை மிரட்டி 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். மேலும் வங்கியில் இருந்த 84 கிராம் தங்கம், சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்யும் கருவி ஆகியவற்றையும் அவர்கள் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக மன்னார்குடி காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அவர்கள், கொள்ளை நடந்த வங்கிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்து சென்ற வாகனங்களின் பதிவெண்கள் மூலம் நாகை, தஞ்சை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை காவல்ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான ஒரு தனிப்படை குழுவினரின் தேடுதல் வேட்டையில், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா இண்டிகா கார், தூத்துக்குடி சண்முகபுரத்தில் நிற்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த வாகனத்தின் ஓட்டுநர் முத்துக்குமார் அவரது நண்பர்கள் மீரான் மைதீன், சுடலை மணி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் மரியசெல்வம் என்பவர், இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையிலான மற்றொரு குழு, மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளையில் வைத்து கடை நிலை ஊழியர் மரியசெல்வத்தை கைது செய்தது.

image

கடந்த 5-ஆம் தேதி மன்னார்குடி வந்த கொள்ளையர்கள் குழு, திட்டமிட்டு, 7-ம் தேதி கொள்ளையடித்துள்ளது. குற்றம்சாட்டப்படும் வங்கி ஊழியர் மரியசெல்வம் 9-ஆம் தேதி அன்று மீண்டும் பணிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து மற்றொரு கார், ஒரு துப்பாக்கி, ஒரு போலித்துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளையில் ஏற்கெனவே இரண்டரை கோடி ரூபாய் அளவு நகை மோசடி புகார் எழுந்தது. மேலும், அங்கு அதிகளவு பணப்பரிவர்த்தனை உள்ளதாக எதிர்பார்த்த மரியசெல்வம், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் அந்த வங்கியை தேர்வு செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

நான்கு பேரிடமிருந்தும் 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. மீதமுள்ள 3 லட்சம் ரூபாய், 84 கிராம் தங்க நகை உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்ளையில் தொடர்புள்ளதாக ராஜா உள்ளிட்ட மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேரையும் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.