​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

Published : Feb 25, 2020 9:46 PM



“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

Feb 25, 2020 9:46 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்து விட்டு திருடிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர்.

மண்ணச்சநல்லூரைஅடுத்த பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லதா தம்பதி. 2014ஆம் ஆண்டு திருமணம் முடித்த இவர்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றைக் கட்டி அங்கு குடியேறினர். 

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி வீட்டுக்கு வெளியே கட்டிலில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட அவ்வூர் மக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் ஆளறவமற்ற பகுதியில் வீடு அமைந்திருந்ததை சாதகமாக்கி மர்ம நபர்கள், தம்பதியை கொலை செய்து விட்டு, நகை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.

2 ஆண்டுகள் ஆகியும் இந்த இரட்டை கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் தவித்து வந்த போலீசாருக்கு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் ரமேஷின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளாகியிருக்கும் தகவல் கிடைத்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாழையூரைச் சேர்ந்த பழனிசாமியைப் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது கொலையாளிகள் குறித்து, முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது.

பெரம்பலூர் ரோவர் கல்லூரி மாணவர்களான பழனிசாமியும் அவனது நண்பன் கிஷாந்த்தும் சேர்ந்தே ரமேஷ் - லதா தம்பதியை கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 10 சவரன் நகையுடன் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள், நம்பர் பிளேட்டை தமிழில் மாற்றி ஓட்டி வந்துள்ளனர்.

நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்ததை கொலையாளிகள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் போலீசாருக்கு மற்றொரு திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

பிடிபட்ட பழனிசாமியின் தம்பி பெருமாள் கடந்த 2017ஆம் ஆண்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். அது தொடர்பாக ஒரு வழக்கு நடந்து வந்த நிலையில், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தனது சொந்த தம்பியை இதே கிஷாந்துடன் சேர்ந்து பழனிசாமி கொலை செய்தது தெரியவந்தது.

ஒரு விபத்து மூலம் 3 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு ஒன்றும் 2 ஆண்டுகளுக்கு முந்தைய மற்றொரு கொலை வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது. சிறப்பாக பணியாற்றி, துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.