​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
SBI வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை- ரூ.19 லட்சம் கொள்ளை

Published : Feb 25, 2020 8:27 AM



SBI வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை- ரூ.19 லட்சம் கொள்ளை

Feb 25, 2020 8:27 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த போது சி.சி.டி.வி. கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததும் ஒரு நபர் நுழையும் அளவுக்கு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் உள்ள 3 பாதுகாப்புப் பெட்டக அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு சுவர்களும் இடிக்கப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. பெட்டகங்களில் இருந்த நகைகள் மற்றும் பணமும் கொள்ளையடிக்கபட்டிருந்தது.

தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து வாடிக்கையாளர்களும் பதறியடித்து வந்ததால் வங்கி முன்பு மக்கள் கூட்டம் அதிகரித்தது. கொள்ளையர்கள் வங்கி முகப்பில் இருந்த 5 கண்காணிப்புக் காமிராக்களையும் உடைத்து பிற கண்காணிப்புக் காமிராக்களுக்கு செல்லும் வயர் இணைப்பையும் துண்டித்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள 3 பாதுகாப்புப் பெட்டக அறைகளின் சுவரை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். 3 அறைகளிலும் மொத்தம் 31 லாக்கர்களை உடைத்து 12 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பணம் இருந்த பெட்டகம் உடைக்கப்பட்டு 18 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அந்த சம்பவத்தை அடுத்து வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது.

இதன் பிறகே மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வங்கியில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததோடு, ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.

திருப்பூர் எஸ்பி திஷா மிட்டல், பல்லடம் டிஎஸ்பி முருகவேல் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். எஸ்.பி. திஷாமிட்டல் தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவம் குறித்தும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் குறித்தும் தங்களுக்கு தகவல் தரவில்லை எனக் கூறி வங்கியின் முன்பு பல்லடம் தாராபுரம் சாலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.