​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறியியல் பட்டதாரி..!

Published : Feb 24, 2020 5:30 PMஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறியியல் பட்டதாரி..!

Feb 24, 2020 5:30 PM

சென்னையில் பெண் குரலில் பேசி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சபல பேர்வழிகளை நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்த ஆண் பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர். 

ப்ரியா என்ற பெண் பெயரில் பல சபல ஆண்களிடம் உருகி உருகி பேசி பணம் பறித்த மோசடி பேர்வழி இவர்தான்...

லோகென்டோ என்ற டேட்டிங் செயலியில் தனது செல்போன் எண்ணை ப்ரியா, ரூபா என்ற பெயரில்பதிவு செய்து வைத்துள்ள ரீகன் என்ற இந்த நபர், ஒரு மணி நேரம் ஆபாசமாக பேச 1000 ரூபாய், வாட்ஸ் அப் மெசேஜுக்கு 500 ரூபாய், நிர்வாண படம் அனுப்ப 100 ரூபாய் என தொடர்பு கொள்ளும் பலரிடமும் பணம் பறித்துள்ளான். இயற்கையாகவே குரல் அச்சு அசலாக பெண் குரலாக இருப்பதால், பெண் என நம்பி சீரியஸாக காதலித்தவர்களும் ஏராளம்.

ப்ரியாவின் குரலுக்காக மாதா மாதம் 5000 ரூபாய் அனுப்பும் துபாய் காதலனும் இந்த பட்டியலில் உண்டு. ப்ரியா என்ற பெயரில் பணம் பறிக்கும் ரீகனிடம் சல்லாப பேர்வழிகள் வீடியோகாலில் வரச் சொல்லி வற்புறுத்தினால் 1500 ரூபாய் கட்டணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவான். ஏன் வீடியோகால் வரவில்லை என ஆவேசமடையும் பேர்வழிகளை சரிக்கட்ட, போலீசை கூப்பிடுவேன் என மிரட்ட தொடங்கிவிடுவான் ரீகன்.

காவல் துறையின் இணைய தளத்தில் புகார் அளித்து அதை ஸ்கிரீன்சாட் எடுத்து, தொந்தரவு செய்யும் நபர்களின் செல்போனுக்கு அனுப்பி வைப்பான். கூடுதலாக புகாரில் அந்த நபரின் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டுவிடுவதால் வீடியோகால் கேட்ட நபர் மிரண்டு போவார். புகாரை வாபஸ் பெற பணம் கொடு என கேட்டு தனது வங்கி கணக்கையும், கூகுள் பே மூலமும் பணத்தை வசூலித்துள்ளான் ரீகன்.

இப்படி பணம் பறிப்பதற்காக ஆன்லைன் மூலம் கொடுத்த புகார் மட்டும் 500-ஐ தாண்டுகிறது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மட்டும் 170 புகார்கள் வெவ்வேறு பெயர்களில் குவிந்துள்ளது. கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ஆன்லைன் மூலம் புகார் வருவதோடு சரி, அதற்கு பிறகு புகார்தாரரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அந்தந்த வழக்குகளை போலீசாரும் முடித்து வைத்துவிடுவார்கள்.

இதனிடையே ஒரே மாதிரியான புகார்கள் ஆன்லைன் மூலம் வருகிறது, ஆனால் வழக்கில் முன்னேற்றம் இல்லை என்பதை அறிந்த போலீசார் சைபர் கிரைம் பிரிவிற்கு இந்த புகார்களை அனுப்பி வைத்தபோது தான் ரீகன் சிக்கியுள்ளான். ஒரே ஐ.பி முகவரியில் இருந்து பல புகார்கள் பதிவாகியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், ஆன்லைன் புகாருக்கு ஆளான எதிர்மனுதாரர் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, நடந்தவற்றை கூறியுள்ளார்.

ப்ரியா என்ற பெண், தன் மீது கொடுத்த புகாரில் காவல் துறை வழங்கும் ஆன்லைன் சி.எஸ்.ஆர் காப்பியை காண்பித்து மிரட்டி பணம் பறித்ததாக அந்த நபர் கூற இந்த மோசடி நடைபெறுவது அம்பலமானது. அந்த நபரிடம் இருந்த செல்போன் ஆடியோவை கேட்டு, ப்ரியா என்ற பெண்ணை தேடிச் சென்ற போலீசாருக்கு, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

பேசிய நபர் பெண் ஆல்ல, பெண் குரலில் பேசும் ஆண் என்பது தெரியவந்துள்ளது. ப்ரியா என்கிற பெயரில் மோசடி செய்த ரீகனை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடம் இதுபோன்று நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். பெண் குரலில் பேசி ஆபாச உரையாடலுக்கு அழைத்து மோசடி செய்ததையும் விளக்கியுள்ளார்.

மேலும் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் சபல பேர்வழிகளிடம் ஆபாச உரையாடல்களை பயன்படுத்தியும், மிரட்டியும் பணம் பறித்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். வேலை கிடைக்காததால் இயல்பாக பெண் குரலில் பேசும் தனது திறமையை பயன்படுத்தி பணம் பறித்ததாகக் கூறும் ரீகன் ஒரு பொறியியல் பட்டதாரி.

ஐடி கம்பெனியில் வேலை செய்வதாக வீட்டில் கூறியுள்ள ரீகன், தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியில் சொந்த வீடு கட்டி, கார் ஒன்றையும் வாங்கியுள்ளான். ப்ரியா என்ற பெயரில், பெண் குரலில் பேசும் ரீகன் கம்பி எண்ணுவது கூட தெரியாமல், போலீசாரிடம் இருக்கும் ரீகனின் செல்போன் பாய் பெஸ்டிகளால் இரவெல்லாம் ரிங்டோன் ஒலித்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர் போலீசார்.